Saturday, July 5, 2014

கனவுகளின் விளக்கம் – Sigmund Freud (part 2)

கனவுகளின் விளக்கம் 

(சிக்மன்ட்  ஃப்ராய்ட்)


 
சிக்மன்ட் ஃப்ராய்ட் யார்?
விரல்விட்டு எண்ணக்கூடிய சில தனி மனிதர்களின் சேவைகளுக்கும் சாதனைகளுக்கும்தான் இந்த உலகமே கடமைப்பட்டுள்ளது என்பது வியப்புதரக்கூடிய உண்மையே. அந்த ஒரு சிலரில் சிக்மன்ட் ஃப்ராய்டும் ஒருவர். அவர் ஒரு பெரிய மேதை என்பதனால் மட்டும் நாம் அவரைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர் தனது அறிவையும் அனுபவத்தையும் மனித மனம் என்னும் மகத்தான ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள செலவிட்டார். அதன் பலனாக அவர் கண்டறிந்த உண்மைகள் இந்த உலகத்தையே உலுக்கின. அதன் சிந்தனைப் போக்கையே மாற்றின. அதுகாறும் மனிதனை அரசியல் ரீதியாகவும், பொருளாதாரம், இலக்கியம், சமயம், கலாச்சாரம், பண்பாடு, தத்துவம் போன்றவைகளின் மூலமாக அறிந்துவந்த உலகு, முதன் முதலாக உளவியல் ரீதியாக ஆழமாக அறிந்து கொண்டது.
அதாவது, மனிதன் தன்னைப்பற்றி தனக்கே தெரியாத உண்மைகள அறிந்துகொள்ள ஃப்ராய்டின் கண்டுபிடிப்புகளும் கோட்பாடுகளும் உதவின. Psychoanalysis மனஅலசல் முறையை ஃப்ராய்டுதான் முதன் முதலில் உருவாக்கினார். Psychoanalysis என்ற சொல்லைக் கொடுத்தவரே அவர்தான். மனித மனத்தின் செயல்பாடுகளையும் மனதைப் பீடிக்கும் நோய்களையும் கண்டுணரும் முறையாகவும் மருத்துவமாகவும் மனஅலசல் அமைந்தது. அதோடு, ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனத்தையும் அதன் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட கலாச்சாரக்கூறுகளையும் புரிந்துகொள்ளவும் அது உதவியது.
ஒரு மருத்துவராக, குறிப்பாக நரம்பியல் நிபுணராக, தொழில்செய்த ஃப்ராய்ட் எத்தனையோ புத்தகங்களில் தான் கண்டுபிடித்த உண்மைகளைச் சொல்லியிருந்தாலும் அவருடைய The Interpretation of Dreams, கனவுகளின் விளக்கம், என்னும் நூலே மிகச்சிறந்ததாகவும் உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. அதனை சுருக்கமாகத் தருவது ஃப்ராய்டை மட்டுமல்ல நம்மை நாமே தெளிவாகப் புரிந்துகொள்ளவும் நிச்சயம் உதவும்.
வாழ்க்கைக் குறிப்பு
ஃப்ராய்ட் கி.பி. 1856-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி ஃப்ரெய்பெர்க் (Freiberg) என்ற ஊரில், தற்போது செக்கோஸ்லாவேகியாவாக உள்ள மொராவியா ( Moravia) நாட்டில் பிறந்தார். 1859-ம் ஆண்டு அவர் குடும்பம் வியென்னா நகருக்குக் குடிபெயர்ந்தது. வியென்னா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயின்றார் ஃப்ராய்ட். மனித மூளையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்தார். விரிவுரையாளராகவும் பணியாற்றினார். மனித மனம் சம்மந்தமான கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதி வந்தார்.
திருப்புமுனை
1885-ன் இறுதியில் நரம்பு மண்டலம் சம்பந்தமான ஆராய்ச்சியைத் தொடர, பாரிஸ் நகரம் சென்றார். பத்தொன்பது வாரங்கள் அங்கு தங்கி ஜீன் மார்ட்டின் ச்சார்காட் (Jean Martin Charcot) என்ற பிரபல மருத்துவரின் கீழ் பணிபுரிந்தார். இது அவர் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஹிஸ்டீரியா நோயாளிகளை ச்சார்காட் அணுகிய முறை ஃப்ராய்டுக்கு ஒரு முற்றிலும் புதிய தீர்வுக்கான விதையைக் கொடுத்தது. உதாரணமாக, உடலுறுப்பு ஒன்று இயங்காமல் பாதிக்கப் பட்டவர்களுக்கு ச்சார்காட் ஹிப்னாடிஸம் மூலம் நோய் நீங்கிவிட்டது என்ற கருத்தைத் திணிப்பதன் மூலம் நிவாரணம் உண்டாக்கினார். அதைப்பார்த்த ஃப்ராய்ட், மனித மூளையை நம்புவதைவிட மனித மனத்தின் சக்திகளை ஆராய்வது பயன்தரும் என்று புரிந்து கொண்டார்.
இரண்டு நட்புகள்
பாரிஸிலிருந்து திரும்பி வந்தபிறகு மார்த்தா பெர்னைஸ் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஆறு குழந்தைகளைப் பெற்றார். அதில் அன்னா என்ற மகள் அவரைப்போலவே பிற்காலத்தில் மனஅலசல் நிபுணரானார்.
திருமணமான காலகட்டத்தில் வில்எல்ம் ஃப்லீஸ் (Wilhelm Fleiss) என்ற மருத்துவரோடு நட்பு ஏற்பட்டு பதினைந்து வருட காலம் அது தொடர்ந்தது. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். மனித உடலில் சில பகுதிகள் பாலுணர்ச்சியை அதிகம் தூண்டக்கூடியவையாக உள்ளன. குழந்தைகளுக்கும் பாலுணர்ச்சி உண்டு என்பன போன்ற கருத்தாக்கங்கள் உருவாக இந்த நட்பு வித்திட்டது.
ஜோஸப் பிரவர் ( Joseph Breuer ) என்ற மருத்துவரோடு ஏற்பட்ட நட்பு இன்னும் ஆழமானது. முக்கியமானது. மன அலசல் என்ற முறை கண்டுபிடிக்கப் படுவதற்கே பிரவரின் நட்புதான் காரணமாக இருந்தது.
ஃப்ராய்ட் மனநோயாளிகளுக்கு ச்சார்காட் தந்த ஹிப்னாடிஸ முறையில் வைத்தியம் செய்துகொண்டிருந்தபோது, பிரவர்தான் அன்னா என்ற பெண் நோயாளிக்கு வித்தியாசமான முறையில் சிகிச்சையளித்தார். நோயாளியை ரிலாக்;ஸ்டாக உட்கார அல்லது படுக்கச் செய்து, மனதில் வந்ததையெல்லாம் பேசச் செய்தார். மனதில் இருந்த குப்பைகளையெல்லாம் வெளியில் கொட்டிய உடனேயே, சிம்னி விளக்கைத் துடைத்தமாதிரி சுத்தமாகி, நோய் குறையவும் மறையவும் ஆரம்பித்தது. இங்கிருந்துதான், இதன் நீட்சியாகத்தான் ஃப்ராய்ட் தன் free association என்ற சிகிச்சை முறையைத் தொடங்கினார். ஃப்ராய்டும் பிரவரும் இணைந்து Studies in Hysteria என்ற நூலையும் எழுதினர்.
கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சி
1897 ஜூலையிலிருந்துதான், தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, ஃப்ராய்ட் கனவுகளைப் பற்றிய தனது ஆராய்ச்சியில் இறங்கினார். பிரபஞ்ச மனத்தை அறிந்துகொள்ள உதவும் ராஜபாட்டை என்று கனவுகளை அவர் வர்ணித்தார். 1899-ல் வெளியான கனவுகளின் விளக்கம் (The Interpretation of Dreams ) என்ற நூல்தான் இவரின் தலைசிறந்த படைப்பு அல்லது பங்களிப்பு என்று அறிஞர் பலராலும் கருதப்படுகிறது.
கனவுகள் யாவும் நனவில் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் களமாக, வடிகாலாக அமைகிறது எனவும் அந்த ஆசைகள் பெரும்பாலும் பாலுணர்வு சம்பந்தப் பட்டதாகவே உள்ளன என்றும் கண்டறிந்து கூறினார். ஃபராய்ட் பொதுவாக மனிதனுடைய எல்லா செயல்பாடுகளுக்கும் ஆழ்மனதில் கிடக்கும் பாலுணர்வே காரணம் என்று நம்பினார். இது உண்மை என்றாலும் மிகைப்படுத்தப்பட்டது என்பதையும் தனது கொள்கைள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இயங்குவதையும் அவர் பிற்பாடு உணரத்தலைப்பட்டார்.
குறிப்பாக, முதல் உலகப் போரின்போது மனநோய்க்கு ஆளான போர்வீரர்களின் கனவுகளை அவர்களின் குழந்தைப்பருவ பாலுணர்வு அடிப்படையில் விளக்க முடியாததை இங்கு குறிப்பிடலாம். குழந்தைப்பருவ பாலுணர்வே – infantile sexuality – மனிதனின் ஒட்டுமொத்த குணாம்சத்துக்கும் காரணம் என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறி, மற்ற உணர்வுகளும் மனிதனை குறிப்பிட்ட குணாம்சங்களுள்ளவனாக மாற்ற வல்லவை என்பதை அவர் 1920 க்குப் பிறகு புரிந்துகொண்டார் என்பதை அவருடைய பிற்கால எழுத்துக்கள் காட்டும்.
1904-ல் வெளியான The Psychopathology of Everyday Life என்ற நூல் நம் அன்றாட வாழ்வில் நிகழும் மறந்துபோதல், வார்த்தைகளைத் தவறாகச் சொல்லுதல், மாற்றிச் சொல்லுதல் போன்றவற்றின் பின்னணியில் மறைந்து கிடக்கும் மனநோய்களைப் பற்றியது.
1905-ல் வெளியான Jokes and their Relation to the Unconscious என்ற நூல், நகைச்சுவையின் பின்னால் மறைந்துள்ள சோகத்தை, பிரச்சனைகளைப் பற்றியது.
இதே வருடம் வெளியான Three Essays on the Theory of Sexuality என்ற நூல் இவரை ஒரு பாலியல் மருத்துவ நிபுணராக நிர்மாணித்தது. மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சரி, மனநோயாளியாக மாறுவதற்கும் சரி, பாலியல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளே காரணம் என்று ஃப்ராய்ட் கருதினார். குழந்தை தாயின் தனங்களில் பாலருந்துவதற்கும் தாய், பால் கொடுப்பதற்கும்கூட பசியோ பாசமோ காரணமல்ல, பாலுணர்வே அடிப்படைக் காரணம் என்று விளக்கினார் என்றால் பார்த்துக் கொள்ள வேண்டும் ! இந்த கருத்தை பின்னாளில் எரிக் ஃப்ரம் (Erich Fromm) போன்ற சமூகவியலாளர்கள் மிகக்கடுமையாக விமர்சித்து ஆதாரபூர்வமாக மறுத்துள்ளனர்.
1920 களில்; வெளிவந்த அவருடைய புத்தகங்களான டீநலழனெ வாந Beyond the Pleasure Principle மற்றும் Ego and the Id ஆகியவை பாலுணர்வு என்ற வட்டத்திலிருந்து அவர் வெளிவர யத்தனித்ததைச் சுட்டும்.
இதில் வேடிக்கை என்னவெனில், மனித மனத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து பிட்டுப்பிட்டு வைத்தவர்தான் ஃப்ராய்ட் என்றாலும் அவர் ஆராய்ந்த அத்தனை மனங்களுமே மனநோயாளிகளுடைய நோயுற்ற மனங்கள் ! அத்தகைய மனங்களிலிருந்து ஆரோக்கியமான உண்மைகள் கிடைத்திருக்குமா என்ற கேள்வி எழுவது நியாயமானதே.
ஃப்ராய்ட் 1939-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி இந்த உலகைவிட்டு மறைந்தார். எனினும் கனவுகள் உள்ளவரை, கனவு காண்கின்ற கடைசி மனிதன் உள்ளவரை அவர் ஃபீனிக்ஸ் பறவையைப்போல உயிர்த்து எழுந்து கொண்டேயிருப்பார்.
ஃப்ராய்டின் கோட்பாடுகளில் தவறு உள்ளது என்பது பின்னால் நிரூபிக்கப் பட்டாலும், கனவு பற்றி விஞ்ஞானபூர்வமாக அறிந்து கொள்ள ஃப்ராய்டின் சிந்தனையை பரிச்சயம் கொள்வது முதலில் அவசியம். அதற்கு சிறந்; வழி அவருடைய எழுத்தைப் படிப்பதுதான். உலகத்தை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்றான சிக்மன்ட் ஃப்ராய்ட் எழுதிய வுh ஐவெநசிசநவயவழைn ழக னுசநயஅள என்ற நூலின் சாறு இனி வரும் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக்குடித்துவிட்டால், இனி கனவு கண்டு பயந்து எழ வேண்டிய அவசியமிருக்காது.




No comments: