Wednesday, July 2, 2014

கனவுகளின் விளக்கம் (சிக்மன்ட் ஃப்ராய்ட்) Part 1

கனவுகளின் விளக்கம் 

(சிக்மன்ட்  ஃப்ராய்ட்)

Freud’s ‘The Interpretation of Dreams’  Translated by Dr. A.S. Mohamed Rafee ( Nagore Rumi)


கனவு காண்பது மனித குலத்திற்கே பொதுவான செயல்பாடுதான் என்றாலும் இஸ்லாம், ஹிந்து மதம், புத்தம், கிறிஸ்தவம் போன்ற உலகப் பெரும் மதங்களில் ஊறி வாழும் மனங்களைக் கொண்ட இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் கனவானது ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடாகிறது. அது ஒரு religious issueஆக கருதப்படுகிறது என்றால் மிகையாகாது.
பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற எந்த முக்கியமானதொரு நிகழ்ச்சிக்கு முன்னோ அல்லது பின்னோ நம் வீட்டுப்பெரியவர்கள் அதன் தொடர்பாகக் கனவு கண்டதாகச் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். நான்கூட என் தாத்தா இறந்து போவதற்குமுன் என் வீட்டு பீர்க்கங்கொடி பட்டுப்போவதாகக் கனவு கண்டு அதை என் பாட்டியிடம் சொல்ல, அவள் யாரோ இறப்பதற்கான அறிகுறி அது என உணர்ந்து அழுதாள். பிறகு சில நாட்களில் என் தாத்தாவும் இறந்துபோனார்.
ஒரு கனவு கண்டுவிட்டால் அதை நாம் எல்லாரிடமும் சொல்லிவிடக்கூடாது என்றும் கனவுகளை சரியாக விளக்குவதற்கென்று தகுதி படைத்த சிலர் உண்டு என்றும் நம்புகிறோம். அப்படி ஒரு சிலருக்கு அத்தகுதிகள் உண்டு என்பது உண்மையோ பொய்யோ, அப்படி நாம் நம்பி அந்த ஒரு சிலரிடம் மட்டுமே விளக்கம் கேட்கிறோம் என்பதே கனவுக்கு நம் வாழ்வில் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைச் சொல்லும்.
எனவே முக்கியத்துவம் வாய்ந்த நம் கனவுகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக நாம் அறிந்து கொள்வது முதலில் அவசியமாகிறது. இதுவரை கனவின் விளக்கங்களாக தமிழ் உலகுக்கு வந்துள்ள எந்த நூலும் இந்த அவசியத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. மாறாக, கனவுக்கு அகராதி போட்டு அதன் அர்த்தத்தைச் சுருக்குவதாகவும் அற்புதமான கனவுகளைக் காண்பதற்குரிய தகுதி பெற்றவராக ஆசிரியர் தன்னைக் காண்பித்துக் கொள்வதாகவும்தான் உள்ளது.
ஆகவே, விளக்கம் அறிவதற்குத் தகுதி உள்ளவரைத் தேடும் அவசியமின்றி, நம்முடைய கனவுகளை அல்லது நம்மை நாமே புரிந்து கொள்வதற்கு விஞ்ஞானபூர்வமானதொரு அடிப்படையைத் தருவதும் அந்த அடிப்படையைத் தந்த சிந்தனையாளர்களில் மிக முக்கியமானவரான சிக்மன்ட் ஃபிராய்ட் (Sigmund Freud) என்ற மேதையின் ஆராய்ச்சிகளை இங்கு காண்போம்



1 comment:

FW Resorts Yercaud said...

Next part quickly i'll post